Monday, December 9, 2013

தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் மரச்சிற்பகலை ...





    தமிழர்கள் தங்களின் அறிவால் விளைந்த கலைப்பொருள்களை அவர்களின் வாரிசுகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே அறிமுகம் செய்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கலைப்பொருள்தான் குழந்தைகளுக்கு விளையாடக்கொடுக்கும் மரப்பாச்சி பொம்மை. மரப்பாச்சி தமிழர்களின் மரச்சிற்பக்கலைக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு.

   மரச்சிற்பங்கள் தமிழர்களின் வீடுகளில் நுழையும்போதே சூரிய பலகையாக வரவேற்பதை இன்றைக்கும் நாம் காணலாம். மற்ற கலைகளோடு ஒப்பிடுகையில் மரச்சிற்பக் கலை அழிந்து விடாமல் வாழும் கலையாக உள்ளது. அதற்கு சூரிய பலகை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். கோயில்களிலும் கடவுள்களின் வாகன்ங்கள் மரச்சிற்பங்களாக செய்யப்படும் வழக்கம் இன்றும் உள்ளது.மரச்சிற்பக்கலைஞர்கள் பல மாவட்டங்களில் உள்ளனர்.

   கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகையில் செய்யப்படும் மரச்சிற்பங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கோயில்களையும் வீடுகளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன என்பது தமிழர்களுக்கு பெருமைசேர்க்கும் செய்தி.

   கோயில்களுக்கான தேர்கள், திருவிழாக்காலங்களில் தெரு உலாச் செல்லும் கடவுளர்களுக்கான ஊர்திகள்,சூரியப்பலகைகள் என அனைத்துவகையான மரச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர் திருவதிகைச்சிற்பிகள். மரபுவழியாகவே இக்கலைத்திறமை இவர்களின் இரத்தத்தோடு கலந்திருக்கிறது. இக்கலைப்பணி ஆறாவது தலைமுறையாகத் தொடர்கிறது.

   1947-ம் ஆண்டு திருவதிகை குப்பாசாரியும் அவர் உடன்பிறந்தவர்களான சுப்ரமணிய ஆச்சாரி,பொன்னுசாமி ஆசாரி ஆகியோரும் சேர்ந்துதான் திருப்பதிகோயில் தேரைச் செய்திருக்கின்றனர். இந்த உடன்பிறப்புகளின் வாரிசுகளான ராசாமணி ஆச்சாரி, புருசோத்தமாச்சாரி,ராசாராம் ஆச்சாரி,ராதாகிருட்டிண ஆச்சாரி,தேவா ஆகியோர் இக்கலைப்பணியை இன்றும் தொடர்கின்றனர்.

 கோயில்களுக்கான தேர் செய்வதற்கென்று இலக்கணம் உண்டு அவ்விலக்கணப்படி தேரைவடிவமைத்து உருவாக்குகின்றனர். கோயிலின் மூல இடத்தில் அளவைப்பொறுத்தே தேரின் அளவை அமைக்கவேண்டும் என்றவிதிமுறைக்கேற்ப தேருக்கான நீள அகலத்தை முடிவு செய்கின்றனர்.
தேரில் பத்து வகையுண்டு. ஸ்ரீகரம், த்வஜம்காந்தம், ரேஷிகேசம், நிகேதுனம், ஸ்ரிபாத்ரம், விசாலஞ்சம், பத்மக்கம், பத்ரம், சிவம் என்று குறிப்பிடப்படும் இவற்றில் கோயிலுக்கேற்ற தேரை வடிவமைப்பது என்பது முக்கியமானது. இவற்றை உணர்ந்துதான் தேரை வடிவமைப்போம் என்று இராசாமணி ஆச்சாரி கூறினார். இவர் திருவண்ணாமலை, செவ்வாய்பேட்டை, புதுச்சேரி, திருக்கோயிலூர் ஆகிய ஊர்களின் கோயால்களுக்குத்தேர் செய்துள்ளார்.

  தேரின் ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு மரத்தால் செய்கின்றனர். தேர்ச்சக்கரம் இலுப்பை மரத்தாலும் அடிப்பாகம் காட்டுவாகை மரத்தாலும் மேல் பாகம் தேக்கு, வேங்கை மரங்களாலும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இவர்கள் செய்த தேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. காசி, ஹைதராபாத், விஜயவாடா போன்ற நகரங்களுக்குச்சென்று தேரும் மரச்சிற்பங்களும் செய்துள்ளனர். சமணக்கோயில்களிலும் சிற்பங்கள் செய்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.
தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருநீரு மலையில் 45 பாகை சாய்வான பாதையில் புதிதாகச்செய்த தேரை ஏற்றுவதற்குப் பொறியாளர்கள் திணரிய போது இராசாராம் ஆச்சாரி அம்மலையில் தேரைப் பத்திரமாக ஏற்றி நிலைநிறுத்தியது தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

  வழுவூர் ராமையாவின் ஆலோசனையோடு ராதாகிருஷ்ணன் ஆச்சாரி உருவாக்கிய நடராஜர் சிற்பம் திருவள்ளூரில் இன்றும் உள்ளது. புருஷோத்தம ஆச்சாரி கடவுளர்களின் வாகனங்கள் பற்றிக் கூறும்போது, சிங்கம், காளை, கருடன், அன்னம், பாம்பு என பல்வேறு விலங்குகளின் உருவங்களைச் செய்துள்ளதாகவும் கூறினார்.

  வாகனங்கள் செய்வதற்கு விலங்குகளின் அடிப்படை வடிவத்தை அத்தி மரக்கட்டைகளில் செதுக்கி வடிவமைக்கின்றனர். அத்திமரம் எடைக்குறைவு என்பதனால் அம்மரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு வஜ்ரம்,மரத்தூள், பிலாஸ்டர் ஆஃப் பாரிஸ் ஆகியவற்றைக்கலந்து கூழ் உருவாக்கி வடிவங்களை மெருகேற்றுகின்றனர். அதன் பிறகு உப்புத்தாள் கொண்டு வழுவழுப்பாக்கி வண்ணம்பூசுகின்றனர்.வண்ணம்பூசப்பட்ட வாகனங்கள் மரச்சிற்பந்தானா? எனக் காண்போரை ஐயமுறச்செய்கின்றன. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து நாள்தோறும் கடவுளர்களின் வாகனங்கள் புதுப்பிப்பதற்காக திருவதிகை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

  தேர், வாகனங்கள் இவற்றைவிடவும் அதிக அளவு சூரியப்பலகைகள் செய்வது இவர்களின் அன்றாட பணியாகும். சூரியப்பலகையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, பண்பாடு, மொழி,சமய வேறுபாடுகளுக்கேற்ப அவர்கள் விரும்பும் சிற்பங்களை உருவாக்குகின்றனர். இதற்கு பெரும்பாலும் பர்மாதேக்கு மரங்களைப் பயன்றடுத்துகின்றனர்.செதுக்கவேணடிய உருவத்தைத் தாளில் வரைந்து அதனைப் பலகையில் ஒட்டி சிறு உளிகொண்டு செதுக்குகி சிற்பத்தை உருவாக்குகின்றனர்.

  இக்கலைப்பணியைத் தொன்றுதொட்டு செய்து வரும் இவர்கள் அடுத்த தலைமுறைக் கலைஞர்களாக தங்கள் வாரிசுகளை உருவாக்கி வருவதோடு இப்பணியில் ஆர்வம் செலுத்துபவர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கின்றனர்.

     கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருது இது வரை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழர்களின் தொன்மக்கலையில் சிறந்துவிளங்கும் இவர்களைத் தமிழக அரசு பெருமைப்படுத்த வேண்டும்.

நன்றி ;தி இந்து 

செடி வளர்ப்பில் செல்வம் 

கொழிக்குது... 




   அழகு, பயன் தரும் செடிகளை வளர்க்க அனைவரும் விரும்புகிறார்கள். வீடு, நிறுவனங்களில் இவை முக்கிய இடம் பிடிப்பதால் செடிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. செடி வளர்க்கும் முறையை கற்றுக் கொண்டு நாற்றுப்பண்ணை (நர்சரி) நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவையில் ரோஜா ராஜா நர்சரி கார்டன் நடத்தி வரும் விஜயகுமார். அவர் கூறியதாவது: கோவையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது அழகு செடிகளுக்கான தேவை அதிகம் உள்ளது குறித்து அறிந்துகொண்டேன். 10 ஆண்டுகளுக்கு முன் கோவை அவிநாசி சாலையில் நாற்று பண்ணை தொடங்கினேன். முதலில் குறைந்த விலையுள்ள அழகு, பழ செடிகளை விற்றேன். பின்னர் படிப்படியாக அனைத்து வகை செடிகளையும் விற்க தொடங்கினேன். ஒரு செடியை ரூ.1 லட்சம் வரை கொடுத்து வாங்க பலர் தயாராக இருக்கிறார்கள். ரோஜா உள்ளிட்ட மலர்செடிகள், புல் வகைகள், லில்லி, தாமரை, ஆர்கிட்ஸ், அந்தூரியம், சைக்கஸ் பல்வேறு வகை செடிகளை விற்கிறோம்.

   புதுவகை செடிகளை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைத்து தருகிறோம். திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச நாற்று பண்ணையை தொடர்பு கொண்டு ஒரு மாதத்தில் செடியை வாங்கி கொடுப்போம். ஆண்டு முழுவதும் தங்கு தடையின்றி செடிகளை விற்று வருகிறோம். தாவரங்கள் பற்றிய அடிப்படை விஷயங்களை ஓரளவு தெரிந்து கொள்வது செடி வளர்ப்புக்கு அவசியம். மாதம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.

   பூந்தொட்டிகள்: பூந்தொட்டிகள் அதிக எண்ணிக்கையில் வாங்க வேண்டும் என்றால் சிவகங்கை, மானா மதுரை பகுதிகளில் மண்பாண்டம் உற்பத்தியாளர்களிடம் வாங்கலாம். கொய்யா, நெல்லி, சப்போட்டா ஆகியவை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலும், பெரிய குளத்திலும், மல்லி செடி மதுரையிலும், பாதையோர வேலி செடிகள், வண்ண மலர் கொடிகள், பல்லாண்டு காலம் பூக்கும் குத்து செடிகள், கல்வாழை, டாலியா, லில்லி, சம்பங்கி, சவுக்கு, காகிதப்பூ, பைன், குப்ரசுஸ், வைரோஸ்டீஜியா, வெட்ரியாவாலிபிலிஸ், முல்லை, மல்லி, காகிதப்பூ, நறுமணம் நிறைந்த செடிகள், அழகான இலை அமைப்பு கொண்ட செடிகளை கேரளா, கர்நாடகா, வடமாநிலங்களில் வாங்கலாம்.

வளர்க்கும் முறை

    ஆர்கிட், அந்தூரியம் ஆகிய செடிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலிஹவுசில் தான் வளர்க்க வேண்டும். செம்மண், மணல் சிறிதளவு சேர்த்து தொழு உரம், தென்னை நார்க்கழிவு மண், மண்புழு உரம் ஒரே அளவு சேர்த்து செடி வைத்தால் 45 நாட்களில் வேர் பிடித்து விடும். வெயில் அதிகம் படாத வகையில் நிழல் வலையில் வைக்க வேண்டும். செடி அதிகம் வளராமல் இருக்க குறிப்பிட்ட சில தினங்களுக்கு ஒரு முறை கிளைகளை வெட்டி விட வேண்டும். கோடை காலத்தில் காலை, மாலை வேளைகளில் முறையாக தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும். பகல் பொழுதில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது. ரோஸ் செடிகளை வெயிலில் வைக்க வேண்டும்.
பூச்செடிகளுக்கு மறைமுக வெயில் தேவை.

    25 தினங்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம்புண்ணாக்கு சமஅளவு கலந்து உரமிட வேண்டும். செடிகளில் தண்ணீர் ஈரப்பதம் எப்போதும் இருக்க வேண்டும். கோடை காலத்தில்தான் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகள் செழிப்பாக இருக்கும். நோய் இருந்தால் கிளைகளை வெட்டி வெயில் இல்லாத நேரங்களில் மருந்து தெளிக்க வேண்டும். பூந்தொட்டிகளை குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.  அழகு செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டு துண்டு முறை, பதியம் போடுதல், பாகம் பிரிப்பு, மொட்டு கட்டுதல், ஒட்டு கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம்.

    பதியம் போடுதல்: கார்னேஷன், செவ்வந்தி, ரோஜா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, மேற்கிந்திய செர்ரி, லிட்சி, குரோட்டன்ஸ், ரம்பூட்டான், கறிப்பலா போன்றவை இம்முறையில் வளரக் கூடியவை.

   தண்டு துண்டு முறை:  திராட்சை, மாதுளை, பேரி, மேற்கிந்திய செர்ரி, தாட்பூட் பழம், லோக்வட், அத்தி, கிவி கறிப்பலா.

   ஒட்டு கட்டுதல்: பெருநெல்லி, மா, சப்போட்டா, பலா, துரியன், ஆப்பிள், பேரி, வெண்ணெய் பழம், மேற்கிந்திய செர்ரி, சீதாப்பழம், ரம்பூட்டான், பெர்சிமன், ஆப்ரிகாட், லோக்வட்.

    மொட்டு கட்டுதல்: அழகுச் செடிகளில் ‘ஜி’ வடிவ மொட்டு அல்லது ‘கேடய’ மொட்டு முறையில் பெருநெல்லி, இலந்தை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பீச், ப்ளம், வெண்ணெய் பழம், லிட்சி, லோக்வட், ஆப்ரிகாட் ஆகியவற்றை பெருக்கம் செய்யலாம்.

    இதற்கான ஆலோசனைகளை வேளாண் பல்கலைக்கழகம் அல்லது வேளாண்துறையின் தோட்ட கலைத்துறையில் பெறலாம்.

கட்டமைப்பு, முதலீடு

  செடிகளை வளர்க்க 4 சென்ட் இடம். அவற்றை வெயிலில் இருந்து பாதுகாக்க நிழல் வலைக்கூண்டு அமைக்க ரூ.40 ஆயிரம். பனிக்கூடாரம் அமைக்க ரூ.50 ஆயிரம். பூக்கும் செடிகளுக்கான மறைமுக வெயில் தரும் கூடாரம் ரூ.30 ஆயிரம். பூந்தொட்டிகள் 200. பூச்செடிகளை வைக்க பாலிதீன் கன்டெய்னர் தேவைக்கு ஏற்றவாறு வாங்க ரூ.12 ஆயிரம். செடிகளை வெட்ட கத்தரிக்கோல் உள்ளிட்ட கருவிகள், இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி, மண் சமப்படுத்தும் கருவி, தண்ணீர் இறைக்கும் மோட்டார், பைப் என மொத்தம் ரூ.2 லட்சம் தேவை. பல்வேறு வகை செடிகளுக்கு ஆரம்ப முதலீடு ரூ.10 ஆயிரம். மிக அதிக விலையுள்ள செடிகளை ஆர்டரின் பேரில் வாங்கி கொடுத்தால் போதும். செடிகள், 2 தொழிலாளர்களுக்கான மாத சம்பளம், மின் கட்டணம், உரம், இட வாடகை, போக்குவரத்து செலவுக்கு என மாதம் செலவு ரூ.30 ஆயிரம். செடிகள் டெலிவரி செய்ய சிறு வாகனம் ஒன்று இருந்தால் நல்லது. இத்தொழிலுக்கு தேசிய தோட்டக்கலை இயக்குனரகத்தில் மானியத்துடன் கடன் பெற முடியும்.

லாபம் எவ்வளவு?

  புங்கம், புன்னை, குல்மோகன், வாகை, சரக்கொன்றை, தான்றிக்காய், பெல்லாரி போன்றவற்றுக்கான விதைகளை விதைப்பண்ணை மற்றும் வேளாண் பல்கலை.யில் பெறலாம். 2 மாதம் வளர்த்து ரூ.50க்கு  விற்கலாம். இதில் ஒரு செடியில் ரூ.15 முதல் ரூ.18 வரை லாபம் கிடைக்கும். கிறிஸ்துமஸ் மரம் ரூ.450க்கும், கொய்யா, நெல்லி, மெர்ரி, பலா, சைனா ஆரஞ்சு ரூ.250 முதல் ரூ.300க்கும், கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட சைக்கஸ் செடி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கலாம். ரோஸ் செடிகளை ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யலாம். சிவப்பு, வெள்ளை, மெரூன், பிங்க், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் கிரிம்சன் கலர்களில் ரோஜா செடிகள் கிடைக்கும். ரோஜா செடிகளை பெங்களூரில் விலைக்கு வாங்கி விற்கும் போது ஒரு செடிக்கு ரூ.8 முதல் ரூ.20 வரை லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் நாமே பதியம் செய்து ரோஜா செடிகளை உற்பத்தி செய்து விற்கலாம். இவ்வாறு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். பேச்சபோடியம் என்ற ஒரு வகை கிழங்கு செடி ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதில் 30 சதவீத லாபம் கிடைக்கும்.

   பேர்ட் ஆப் பாரடைஸ் அழகு வகை செடியை ரூ.200க்கு வாங்கி அதிக உயரம் வளர்த்து பக்குவப்படுத்தி விற்றால் ரூ.5 ஆயிரம் வரை விற்கலாம். ஆனால் இது கிடைப்பது அரிது. எலுமிச்சை, பெருநெல்லி, ஆரஞ்சு, சீதாப்பழம், துரியன், லிட்சி, மங்குஸ்தான், மேற்கிந்திய செர்ரி, தாட்பூட் பழம், பிளிம்பி கெரம்போலா கரோனடா, சோக்வர், பால்ஸா போன்றவைகளுக்கு விதை தேவை. இதற்கான விதை வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் விதை பண்ணைகளில் கிடைக்கும்.  எலுமிச்சை விதை 10 கொண்ட பாக்கெட் விலை ரூ.50. செடிகளாக்கி விற்பனை செய்தால் ஒரு செடியை ரூ.200 முதல் ரூ.400 வரை விற்கலாம். செடியின் உயரம் மற்றும் எலுமிச்சை காய் விடுதல் வளர்ச்சியை பொருத்து செடியை அதிக விலைக்கு விற்கலாம்.




பிரிட்ஜில் வைக்கக்கூடாத 10 பொருட்கள் ...

  
 பொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவே கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற பொருட்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நாம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாகப் பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுவை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

முலாம்பழம்

   கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.
இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிளம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
கரகாட்ட கலையும், கசப்பான உண்மையும் ...



  தலையில் கரகம் சுமந்து செல்வது நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஒன்றாகும். குறிப்பாக கிராமக் கோயில்களில் ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மகாபாரதம் கதைப்பாடல் வடிவத்தில் நிகழ்த்தப்படும்போது முதல் நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டும் விழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து பதினெட்டு நாட்களும் விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும்.

     அப்போது, முதல் நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக தாள் கரகம் சோடித்தல் அமையும். (தாள் கரகம் என்பது குடத்தின் வாய்ப்பகுதியில் பல்வேறு வண்ணத்தாள்களால் செய்யப்பட்ட முக்கோண வடிவ கொடிகள் ஒட்டப்பட்ட குச்சிகள் செறுகப்பட்டிருக்கும்). பக்தர் ஒருவர் அதைத் தலையில் சுமந்து வருவது உண்டு.

   அதுபோலவே தீமிதித் திருவிழாவன்று அக்கினி கரகம் (மண் பானையில் மரக்கட்டைகளை இட்டு தீ மூட்டி தகதகவென எரியவிடுவர். தீ, பானையின் வாய் வழியே நாவை நீட்டும்) எனப்படும் தீக்கரகத்தைச் சுமந்து வருவதும் வழக்கம்.
  
   கரகம் சுமப்பது என்ற வழக்கம் ஒரு வழிபாட்டு மரபாக இருந்துள்ளது. இத்தகையதொரு வழிபாட்டுச் சடங்கு நாளடைவில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று ஒரு நிகழ்த்துக் கலையாக வளர்ந்துள்ளது. தலையில் கரகம் சுமந்து ஆடும் ஆட்டம் கரகாட்டம் என்றாலும், கலைஞர்களின் தனித்திறமைக்கேற்ப பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது இக்கலை.

    கரகாட்டக்கலை இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு கலை என்றாலும், அக்கலைஞர்களின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.

   தகவல் தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, கலைகளைப் பெரிதும் பாதித்துள்ளது, என்றாலும் அதையே சாதகமாக மாற்றிக்கொள்ளும் கலைஞர்களும் உண்டு. தொலைக்காட்சிகளின் ஆதிக்கம், எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்த வேண்டிய தேவையை இன்று கட்டாயமாகியிருக்கிறது. கலைகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

   நாட்டுப்புற கலைகள், அந்தக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அக்கலைஞர்கள் தொடர்ந்து வாழ்க்கையை நடத்துவதற்கு கலை நிகழ்ச்சிகளைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். அதிலும் போட்டிகள் உண்டு. எனவே ஒவ்வொரு கலைக்குழுவும் தங்கள் குழுவை நிலைநிறுத்த விளம்பரப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
  
   தஞ்சாவூர் கிழக்கு வாசல் பகுதியில் கரகாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம் என பல குழுக்கள் தங்கள் கலைக்கான விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

  என்னதான் விளம்பரப்படுத்தினாலும் இதுபோன்ற கலைகள் கோயில் திருவிழாக்களை நம்பியே உள்ளன. அதில் ஈடுபடும் கலைஞர்கள் உரிய முறையில் கெளரவிக்கப்படுவதில்லை. ஓலைக் குடிசைகளில்தான் அவர்களின் வாழ்க்கை கழிகிறது. நாம் அந்த கலைகளின் சிறப்பைப் பேசுவதால் அவர்களின் வாழ்வில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை. கலை அவர்களை வாழவைக்கிறதோ இல்லையோ அவர்கள் கலைகளை வாழவைத்துக்கொண்டுள்ளனர் என்பதுதான் கசப்பான உண்மை. நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். அரசு அவர்களுக்கென்று நல வாரியம் அமைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

  கலை, கலையாக மட்டும் இல்லாமல், அதில் பல நுண் அரசியல் இயங்குகிறது. அவற்றையெல்லாம் மீறியும் பல கலைஞர்கள் பல்வேறு கலைகளில் ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள ஊ.மங்கலம் கிராமத்தில் உள்ள கரகாட்டக் கலைஞர் மாலா. இவர் பிறந்தது பண்ருட்டி அருகிலுள்ள தண்டுப்பாளையம். தற்போது கணவர் தமிழ்ச்செல்வனோடு ஊ.மங்கலத்தில் வாழ்ந்து வருகிறார்.

     மாலாவின் பெற்றோர் தொடக்கத்தில் கரகாட்டம் ஆடுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவருக்குள்ளிருந்த கலை உணர்வை யாராலும் தடுக்க இயலவில்லை. பத்து ஆண்டுகள் கரகாட்ட அனுபவம் பெற்ற தேர்ந்த கலைஞராக ஆடச் செல்லுமிடங்களிலெல்லாம் பார்வையாளர்களின் பாராட்டைப்பெற்று வருகிறார் மாலா.
  
  கரகத்தைத் தலையில் சுமந்தபடி தீப்பந்தத்தினுள் செல்வது, குழல் விளக்குகளை உடைப்பது என தன் தனித்திறமைகளை இக்கலையோடு இணைத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துவது மாலாவின் வழக்கம். இவருடன் இணைந்து ஆடும் ஆண் கலைஞர் ரவிராஜ். இவரும் அதே ஊரைச் சேர்ந்தவர். இவர் முதலில் குறவன் குறத்தி ஆட்டத்தைத்தான் ஆடியுள்ளார். பிறகு தானாகவே கரகாட்டம் கற்றுக்கொண்டு இன்று கரகாட்டக் கலைஞராக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளார்.

   பள்ளிப்பருவத்திலேயே ஆட்டத்தில் நாட்டம் கொண்டவர் ரவி. பள்ளிக் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப் பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகும் வரை இக்கலையில் ஈடுபட எவ்வித எதிர்ப்பும் இல்லை. அதன் பிறகு இவர் மனைவிக்கு இதில் விருப்பமில்லை. ஆனாலும் ஆடிப்பழகிய ரவியால் வேறு வேலைகளில் ஈடுபடமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி இவரது ஆட்டம் இவரின் மனைவிக்கும் பிடித்துப்போக தொடர்கிறது கலைச் சேவை.

  இப்படித்தான் பல கலைஞர்கள் கலை வாழ்க்கைக்கு தங்களை அற்பணித்துள்ளனர். அவர்களை கெளரவப்படுத்த இயலவில்லை என்றாலும், அவமானப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோளாக இருக்கிறது.