Sunday, January 19, 2014

கோலம் போடுவதால் என்னபயன் ?
  பண்டிகைகள், திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு விசேஷம் என்றாலும் அவற்றில் வாழைமரம், மாவிலை, கோலம் ஆகிய மூன்றும் நிச்சயம் இருக்கும். அதிலும் முக்கியமாக பெண்கள் கோலம் போடும் கலையே தனி.


   ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் கோலம் போடுவது என்பதே அரிதாகிவிட்டது. கோலம் போடுவதற்கு என்று ஒரு ஆள்வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பலர் அறி்வதில்லை. அறிவு விசாலம், நாகரிக விருத்தி, சோம்பலின்மை, மறதியின்மை, சூட்சமபுத்தி, முயற்சியார் ஊக்கமுடமை, மனச்சோர்வின்மை போன்ற மனம் தொடர்பான செயல்பாடுகள் கோலம் போடுவதில் அடங்கியுள்ளன.

கோலங்கள் பலவகை
   கோலத்தில் பல விதங்கள் உள்ளன. பாக்குத்தட்டு, கலியாண மேடை, கிரீடம், பூச்சரம் என பலப் பெயர்கள் வைத்து அக்காலத்தில் கோலமிட்டுள்ளனர். குறிப்பாக மார்கழி மாதத்தில் கோலமிட்டு அதன் நடுவில் சாணி உருண்டையில் பூசணிப்பூவை வைத்து அழகு பார்ப்பது வழக்கம். பச்சரிசியை அரைத்து, அந்த மாவில் கோலமிடுவார்கள். சிற்றுயிர்களும் அதை உண்டு வாழ வேண்டும் என்பதே அதன் நோக்கம். கோலம் போடுவது என்பதே பச்சரிசி மாவில் போடுவதையே குறிக்கும். ஆனால் இப்போது கல்பொடியைப் பயன்படுத்திவருகின்றனர்.

கோலப் புத்தகம்
   கோலம் தொடர்பாக 1884ஆம் ஆண்டில் நூல் ஒன்று வெளிவந்துள்ளது. அட்டமங்கலத்துள் ஒன்றாகிய கோலப்புத்தகம், முதற்பாகம். இது நமது நாட்டு மாதர்களுக்கும் பாலிகாபாடசாலைகளுக்கும் உபயோகமாகும் பொருட்டு வேலூரில் இருக்கும் அமெரிக்கன் மிஷன் உயர்குலத்துப் பாலிகாபாடசாலையின் உபாத்தியாயர் திருவேங்கடம் பிள்ளையவர்களால் தமது தமக்கையார் சுப்பம்மாள் வேண்டுகோளின்படி இயற்றி சென்னை கவரன்மென்ட் பிரஸிடென்சி காலேஜி ஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் தொழுவூர் வேலாயுதமுதலியார் அவர்களால் பார்வையிடப்பட்டு இராயவேலூர் ஸ்கா ட்லாண்டு மிஷன் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் வே. இரத்தினவேலு ஐயர் அவர்களால் சென்னை ஆதிகலாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment