அரசின் மானியம் பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை...
விவசாயிகள் பயிர் செய்யும் எந்த பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணியாகும். இந்த தண்ணீர் பாசனம் பயிர்களுக்கு சென்று சேரும் முன் பல்வேறு நிலைகளில் விரயமாகிறது. இதனை தடுத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் சில திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் ஒன்று தான் தேசிய நுண்நீர் பாசன இயக்க திட்டம். நீரின் அழுத்த விசையை பயன்படுத்தி பாசனம் செய்யும் அனைத்து பாசன முறைகளும் இந்த திட்டத்தில் அடங்கும். பொதுவாக நுண்நீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மானியம்
சொட்டு நீர் பாசனம் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகள் இலவசமாகவும், இதர விவசாயிகள் 75 சத மானியத்திலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு, அதாவது நஞ்சை நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் அளவிற்கும், புஞ்சை என்றால் 5 ஏக்கர் அளவிற்கும் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மத்திய அரசின் 50 சத மானியத்திலும், மாநில அரசின் 50 சதவீத மானியத்தையும் பெற்று இலவசமாகவே சொட்டு நீர் பாசனத்தை தங்களது நிலத்தில் அமைத்துக் கொள்ளலாம்.
இதர விவசாயிகள் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசின் மானியம் 25 சதவீதத்தையும் பெற்று ஆக மொத்தம் 75 சதவீதம் மானியத்தை பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.
அதிக பட்ச தொகை
இந்த அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க அதிகபட்சமாக 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது இது 100 சதவீத மானியத் தொகையின் அளவு ஆகும். இந்த தொகையில் சிறு, குறு விவசாயிகள் காய்கறிகள், வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு 1 ஏக்கருக்கும், வாழை என்றால் ஒன்றரை ஏக்கருக்கும், பப்பாளி, எலுமிச்சை, மாதுளை, கொய்யா ஆகியவற்றுக்கு 3 ஏக்கர் முதல் 4 ஏக்கர் வரையிலும் சப்போட்டா, மா, தென்னை ஆகியவற்றுக்கு 5 ஏக்கர் வரையிலும் இலவசமாகவே சொட்டு நீர் பாசன கருவிகளை அமைத்துக் கொள்ளலாம்.
பெரிய விவசாயிகள் அதிகபட்சமாக 12.5 ஏக்கர் வரை 75 சத மானியத்தில் சொட்டுநீர் பாசனக்கருவியை எந்த பயிருக்கும் அமைக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தங்களது நில ஆவணங்களுடன், அதாவது கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேசன்கார்டு நகல்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும். சிறு, குறு விவசாயிகள் தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும். ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வாறு தேர்ந்தெடுத்த நிறுவன பொறியாளர், விவசாயின் நிலத்தை ஆய்வு செய்து சொட்டு நீர் பாசன அமைப்பை அமைக்கும் முன் ஆய்வு செய்வார். பிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயியின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும். இந்த விண்ணப்பம் மாவட்ட நுண்நீர் பாசன தொழில்நுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அவர்கள் அதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர். அதற்கு பின் விவசாயியின் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும். விவசாயி தனது செலவில் பூமிக்கு அடியில் பதிக்க வேண்டிய மெயின், சப்மெயின் குழாய்களுக்கு ஒன்றரை அடி ஆழ வாய்க்கால் எடுக்க வேண்டும். இதற்கு பின் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனம் பாசன கருவிகளை நிர்மாணம் செய்யும். நிறுவனம் சொட்டு நீர் பாசன அமைப்பை அமைத்து அதன் செயல்பாட்டை ஆய்வு செய்த பின் நிறுவனத்திற்கு விவசாயியின் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அமைக்கப்படும் சொட்டு நீர் பாசன அமைப்பை அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்யும்.
பயன்கள்
சொட்டு நீர் பாசனம் அமைப்பதால் நீர் விரையம் குறையும். பயிர்களுக்கு பாசன நீர் மூலம் பரவும் பூஞ்சான நோய்கள் தடுக்கப்படுகிறது. சாதாரண பாசன முறையில் பாய்ச்சும் நிலப்பரப்பை விட இரண்டரை முதல் மூன்று மடங்கு நிலத்திற்கு கூடுதலாக நீர் பாய்ச்ச முடியும். பயிர்களுக்கு சீரான நீர் மற்றும் உரம் கிடைப்பதால் முறையான வளர்ச்சியும், சீரான முதிர்ச்சியும் கிடைக்கும். மொத்த விளைச்சல் 50 முதல் 100 சதவீதம் அதிகரிக்கும்.
தகவல்: த.காமராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர், மதுரை கிழக்கு.
98652 80167
விவசாயிகள் தரமான விதைகளை கண்டறிவது வாங்குவது...
தரமான விதைகளை கண்டறிந்து பயிரிடும் போது தான் எதிர்பார்த்த மகசூலை பெற முடியும். இதற்கு, நிர்ணயிக்கப்பட்ட சில காரணிகளை கொண்டு நடவுக்கு தேர்வு செய்யப்படும் விதைகளின் தரத்தை விவசாயிகள் கண்டறிய முடியும். சாகுபடிக்கு பிரிக்கப்படும் விதைகளில் காணப்படும் முளைப்புத்திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் விதை நலம் என்பதே அந்த காரணிகளாகும். இந்த காரணிகளை வைத்து தான் தரமான விதைகள் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றை பற்றி பார்க்கலாம்.
முளைப்புத் திறன்
விவசாயிகள் பொதுவாக அதிகம் மகசூல் தரும் முளைப்புத் திறன் கொண்ட விதைக்காரணியையே பெரிதும் விரும்புகின்றனர். இவற்றையே சார்ந்தும் உள்ளனர். ஒரு விதைக்குவியலின் முளைப்புத்திறன் 98 சதவீதமோ அல்லது அதற்கும் அதிகமானதாக இருந்தால் அந்த விதைகளின் விலை மதிப்பு அதிகமானதாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் விதைப்புக்கு குறைவான எண்ணிக்கையே போதுமான விதைகளாகவும், முளைப்புத்திறன் அதிகமும் உள்ள விதைகள் அதிக மகசூலை கொடுக்கின்றன. முளைப்புத்திறனை வைத்து விதைகளின் தரத்தை நிர்ணயிப்பதால் ஒவ்வொரு விதைக்கும் அதற்கான குறிப்பிட்ட முளைப்புத் திறன் பரிந்துரைக்கப்படுகிறது. விதைகளை விற்கும் போது அந்த விதையின் குறைந்த பட்ச முளைப்பு திறனை அட்டையில் குறிப்பிட்டிருப்பார்கள். அதன்படி, நெல்லுக்கு 80 சதவீதம், மக்காச்சோளதிற்கு 80, கம்பு பயிர் 75 , கேழ்வரகு 75, பருத்தி65, எள் 80 , தக்காளி 70 , வெண்டை 65 , கத்தரி 70, மிளகாய் 60 சதவீதமும் முளைப்பு திறன் கொண்டிருக்க வேண்டும்.
புறத்தூய்மை
பொதுவாக அறுவடை செய்யப்பட்ட பின்பு அந்த விதைகளில் கல், மண் மற்றும் பிற பயிர் விதைகள் கலந்திருக்கும். இவைள் அனைத்தும் விதைகளின் புறத்தூய்மையை பாதிக்கும். எனவே விவசாயிகள் விதைகளை வாங்கும் போது அதில் குறிப்பிட்டிருக்கும் புறத்தூய்மையின் மதிப்பு அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட விதைகளின் புறத்தூய்மை அளவுகளை பார்க்கலாம். நெல் என்றால் அதன் புறத்தூய்மை அளவு 98 சதவீதம் இருக்க வேண்டும். இதே போல் மக்காச்சோளத்திற்கு 98, சோளம் 98, கம்பு 98, கேழ்வரகு 97, பருத்தி 98, பயறு வகைகள் 98, நிலக்கடலை 97, எள் 97, சூரியகாந்தி 98, ஆமணக்கு 98, தக்காளி 98, வெண்டை 99, கத்தரி 98, மிளகாய் 98 சதவீதம் என்ற அளவுகளில் இருக்க வேண்டும்.
இனத்தூய்மை
விதைகளை விற்பனை செய்வதற்கு முன்பு அந்த விதைகளின் இனத்தூய்மையை ஆய்வு செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இனக்கலப்படம் உள்ள விதைகளால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். உதாரணமாக அதிக வாழ்நாள் கொண்ட ரக விதையும், குறுகிய வாழ்நாள் கொண்ட ரக விதையும் ஒரு விதைக்குவியலில் கலந்திருக்கலாம். இதை விதைக்கும் விவசாயிகள் திகைத்து போவார்கள். இந்த இரண்டு ரகமும் மாறுபட்ட காலங்களில் பூ பூக்கும். இதனால் ஒரே சமயத்தில் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே, ஒரு விதைகளை வாங்கும் போது அந்த விதைகள் குறைந்த பட்ச இனத்தூய்மையை கொண்டுள்ளதா என்று சான்று அட்டையை பார்த்து வாங்க வேண்டும். ஒவ்வொரு விதைக்குரிய அதிகபட்ச பிற ரக விதைகளின் கலப்பை இங்கே பார்க்கலாம். நெல்லுக்கு ஆதாரநிலையில் ஒரு கிலோ விதையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையில் கலப்பு விதைகளின் அளவு இருக்கலாம். இதே போல் மக்காச் சோளத்திற்கு ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20, சோளம் 10 மற்றும் 20, பயறு வகைகள் ஆதார நிலையில் கிலோவுக்கு 10 மற்றும் சான்று நிலையில் 20,எள் பயிரில் ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையிலும், கம்பு, கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, தக்காளி, கத்தரி, சூரியகாந்தி போன்றவை கலப்பு இன்றியும் இருக்க வேண்டும்.
விதை ஈரப்பதம்
விதைகளின் தரமும், சேமிப்பு தன்மையும் அந்த விதைகளின் ஈரப்பதத்தை பொறுத்தே அமைகின்றன. எனவே, விதையின் ஈரப்பதத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது விதையின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது. விதையின் ஈரப்பதம் பயிருக்கு பயிர் மாறுகிறது. உதாரணமாக, நெல் விதைகளை 13 சதவீதம் ஈரப்பதத்திலும், கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் தானிய விதைகளை 12 சதவீதம் ஈரப்பதத்திலும், பருத்தி, வெண்டை மற்றும் தீவனப்பயிர் விதைகளை 10 சதவீதம் ஈரப்பதத்திலும், நிலக்கடலை, சூரியகாந்தி, சணப்பு ஆகியவற்றை 9 சதவீதம் ஈரப்பதத்திலும் காற்று புகாத பைகளில் சேமிக்கலாம்.
விதை நலம்
பயிர்களில் 30 சதவீதம் நோய்கள் விதைகள் மூலம் பரவுகிறது. எனவே பரவும் நோய்களை விதைகளிலேயே கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நோயற்ற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் அதிகபட்ச நோய் தாக்குதல் கொண்ட விதைகளின் அளவு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நெல் ஆதாரநிலையில் 0.01 சதவீதம் மற்றும் சான்று நிலையில் 0.05, சோளம் 0.02 மற்றும் 0.04 சதவீதம், கம்பு ஆதார நிலையில் 0.02 மற்றும் சான்று நிலையில் 0.04 சதவீதம் என்ற அளவுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தரமான விதைகளுக்கு சான்று அட்டை வழங்கப்பட்டிருக்கும். தரமான விதைகளை பெற விவசாயிகள் சான்றட்டை கொண்ட விதைகளையே வாங்கி விதைக்க வேண்டும்.
தகவல்: கு.சிவசுப்பிரமணியம், க.சுஜாதா, ரா.கீதா, க.செல்வராணி, அ.புனிதா மற்றும் ஜெ.பத்மா.
விதை அறிவியல் மற்றும் நுட்பத் துறை, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை.
விவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்...
வேளாண்மை உற்பத்தி திறனையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க அரசால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வேளாண் வளர்ச்சியானது, நீரினை பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவதில் அடங்கியுள்ளது. இதனை அடைந்திட பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு எளிதாக கிடைத்திட நீர் வள அமைப்புகளை வலுப்படுத்துவதும் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளை ஒருங்கிணைப்பதும் அவசியமாகிறது.
இதனை கவனத்தில் கொண்டு நீர்வள நிலவள திட்டம் அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயிரிடும் பயிர்களுக்கு ஜீவநாடியாக உள்ள பாசன கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நீர்வள நிலவள திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாசன நிலங்களுக்கு முதுகெலும்பாக உள்ள பாசன உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பதுடன், பாசன கால்வாய் அமைப்புகளை புணரமைத்து அதன் பழைய நிலைக்கு கொண்டுவருதல் மற்றும் குளங்களை புதுப்பிப்பது போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும்.
முக்கிய நோக்கங்கள்
நவீன நீர்சேமிப்பு பாசன தொழில் நுட்பங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாசன சேவை முறையை மேம்படுத்துதல்
நீர் பயனீட்டாளர் சங்கம் அமைத்தல் மற்றும் நீர்வள மேலாண்மையில் விவசாயிகளை ஈடுபடுத்துதல்
வேளாண்மை தீவிரப்படுத்துதல் மற்றும் மாற்று பயிர் சாகுபடி செய்தல்
62 உபவடி நிலங்களில் உள்ள பாசன அமைப்புகளை கொண்டு பயன்பெறும் பாசன பரப்பை அதிகரித்தல் மற்றும் பாசனத்தை உறுதி செய்தல்
வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்தல் மற்றும் பயன்பெறும் உழவர்களின் வருவாயை அதிகரித்தல்
வேளாண்மையை சார்ந்த இதர தொழில்களான மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவைகள் மூலம் பண்ணை வருவாயை அதிகரிக்க செய்தல்
விற்பனை செய்யும் வகையில் மகசூலை பெருக்குவது மற்றும் விளைபொருட்களை அதிகமாக சந்தைக்கு கொண்டு வர செய்தல்
இந்த திட்டத்தின் கீழ் நீர்வள ஆதார துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை விற்பனை துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வள துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன.
திட்டப்பணிகள்
பாசன அமைப்புகளை நவீனப்படுத்துவதின் கீழ் இந்த திட்டம் இரண்டு உட்பணிகளாக செயல்படுகின்றன.
நீர் சேதாரத்தை குறைக்கவும் மற்றும் ஏரியிலிருந்து நீரினை கொண்டுவரும் திறனை மேம்படுத்தவும் தேவையான சீரமைப்புகளை மேற்கொள்ளுதல்
வரத்து கால்வாய்களை சீராக்குதல் மற்றும் தூர்வாருதல் மூலமாக நீர்நிலைகளின் கொள்ளளவை மேம்படுத்துதல்
அதிக உபயோக வட்டாரங்களில் நிலத்தடி நீரினை சேகரிக்கும் கட்டமைப்பை அமைத்தல்
சுற்றுச்சூழலை கணித்தல் மற்றும் உபவடி நிலங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்க்க ஆய்வு மேற்கொள்வது
பாசன வேளாண்மைக்கான அமைப்பினை நவீனப்படுத்துதல்
நவீன முறையில் திறமையான வரைமுறைக்குட்பட்ட பாசன சேவையை அளிப்பதே நோக்கம். இது தொடர்பான பணிகள் நீர்வள ஆதார துறை மற்றும் பாசன நீர் பயனீட்டாளர்கள் சங்கம் மூலமாகவும் செயல்படுத்தப்படும். அதாவது குறிப்பிட்ட பகுதியின் நீர் ஆதாரங்கள் முக்கிய நீர் பயனீட்டாளர் சங்கங்களுடன் விவாதித்து வடிவமைத்து மேம்படுத்தப்படும்.
நீர்வள ஆதார துறையில் உள்ள அனைத்து அலுவல்களையும் இணைய தளம் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் ஒருங்கிணைத்து தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கப்படும்.
விவசாயிகளுக்கு பயிற்சி,சுற்றுலா மற்றும் கருத்தரங்குகள் நடத்த ஆதரவளிக்கப்படும்.
விவசாயிகள் பங்கு கொள்ளும் பாசன மேலாண்மை மற்றும் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பயிற்சி பிரிவுகளை அமைத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்காக பாசன ஆராய்ச்சி நிதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இந்த திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
நன்றி ; பசுமை இந்தியா.
No comments:
Post a Comment