Thursday, August 22, 2013

பச்சை தொப்பி !

         ஒரு வேப்பமரம் ,சில தென்னைமரங்கள், கொஞ்சம் பூச்செடிகள்  பிரமாதமான காய்கறித் தோட்டம் என ஒரு கனவு இல்லத்துக்கு  அநேகமாக சென்னையில்  வாய்ப்பே இல்லை . ஆணால் ,இந்த கான்கிரீட்  காட்டிலும் காய்கறிகளைப்  பயிரிட முடியும்  என்கிறார்  இந்திரகுமார் .
              பம்மல் அருகே உள்ள சங்கர் நகரில் தன் வீட்டு மொட்டை மாடியில் கத்தரி, வெண்டை, மிளகாய், மூலிகைச் செடிகள் என விதவிதமாகப் பயிரிட்டு ஆச்சர்யப்படவைக்கிறார்.
    ''இந்த வீடு 800 சதுர அடிகள்தான். மொட்டை மாடி முழுக்க, காய்கறி, மூலிகை, பூச்செடிகளை வளர்க்கிறேன். எங்க குடும்பத் தேவை போக, மிச்சம் இருக்கும் காய்கறிகளை அக்கம் பக்கத்தினருக்கு வழங்குகிறேன். குளியலறை, கழிவறை, சமையல் அறைகளில் இருந்து வெளியேறும் நீரில் ரசாயனங்கள் கலந்து இருக்கும் என்பதால், அதை அப்படியே செடிகளுக்குப் பாய்ச்சுவது இல்லை. இந்த நீரை எளிய முறையில் சுத்திகரிக்க, மூன்று அடி நீளம், அகலம், ஆழம் உள்ள ஒரு சிமென்ட் தொட்டியை அமைத்தேன். அதில், மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றைப் பாதி அளவுக்கு நிரப்பி, கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நடவு செய்தால், ஜல்லியில் உருவாகும் பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் உள்ள பாஸ்பேட், சோடியம் உப்புகளைத் தின்றுவிடும். இப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பாய்ச்சினால், செடிகள் ஜோராக வளரும்!'' என்றவர் அடுத்து சொன்ன விஷயம் ஆச்சர்யப்படுத்தியது. 
'மனிதக் கழிவுகளைச் சிதைக்க, கப்பல், விமானங்களில் பயன்படுத்தப்படும் 'பேசிலஸ்' என்ற நன்மை செய்யும் பாக்டீரியாவை செப்டிக் டேங்கில் கொட்டிவிட வேண்டும். ஒரு வாரத்தில் தீமை செய்யும் பாக்டீரியாக்களை, இந்த
                         பேசிலஸ் உண்டுவிடுவதால், டேங்க்கில் வெறும் தண்ணீர் மட்டும்தான் இருக்கும். இதன் மூலம் செப்டிக் டேங்க்கைச் சுத்தம் செய்யும் வேலையும் இல்லை. செடி, கொடிகளுக்குத் தண்ணீரும் கிடைக்கும். இந்த 'பேசிலஸ் பாக்டீரியா’ குதிரை சாணத்தில் இருந்துதான் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த பாக்டீரியா கிடைக் காதவர்கள், குதிரை சாணத் தையேகூட நேரடியாகப் பயன்படுத்தலாம். இந்த பாக்டீரியாக்கள் சம்பளம் வாங்காத சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்'' என்று சொல்லும் இந்திரகுமார், அடுத்து விளக்கிய ஆச்சர்யம்... இயற்கை ஏ.சி.

   ''1983-ல் பெங்களூரு அறிவியல் மையத்தில் இங்கிலாந்து கட்டடக் கலை வல்லுநர்கள், ஏ.சி. இல்லாத கட்டடம் கட்டித் தந்தனர். 'இந்தத் தொழில்நுட்பத்தை எங்கு கற்றீர்கள்?’ என்று கேட்டதற்கு  'உங்கள் ஊர் கோயில் கோபுரம், அரண்மனை டூம்களைப் பார்த்துதான்!’ என்றார்களாம் அந்த வல்லுநர்கள். நம் தொழில்நுட்பத்தை, நமக்கே திருப்பிக் கொடுத்த அவர்களுக்கு, அன்று வழங்கப்பட்ட சம்பளம்... 27 லட்சம்!
     இதைக் கேள்விப்பட்ட நான், 'நாம் வீடு கட்டும்போது, இயற்கை ஏ.சி. வைத்துதான் கட்ட வேண்டும்’ என்று முடிவு செய்தேன். இது, விமான நிலையப் பகுதி என்பதால், ஒரு மாடிக்கு மேல் கட்ட அனுமதி இல்லை. எனவே ஒரு மாடி கட்டி அதன் மீது இந்த இயற்கை ஏ.சி-யை அமைத்து உள்ளேன். மொட்டை மாடியில், நீளம், அகலம், உயரம் அனைத்தும் நான்கு அடி உள்ள கான்கிரீட் கூரையை அடிப் பாகத்தில் அரை அடி இடைவெளிவிட்டு அமைக்க வேண்டும். இந்த இடைவெளி வழியாகக் காற்று கான்கிரீட் கூரைக்கு உள்ளே புகுந்து வீட்டுக்குள் செல்வதால் வீடு எப்போதும் குளுமையாக இருக்கும். இந்தக் கூரையின் மீது கண்ணாடி பதித்தால் வீடும் வெளிச்சமாக இருக்கும். இதைக் கட்டுவதற்கு, 15 ஆயிரம் ரூபாய்தான் செலவானது. கரன்ட் பில் எகிறாமல் வீடு ஜில்லுனு இருக்கே!'' என்று வழிகாட்டுகிறார் இந்திரகுமார்.
நன்றி ; பசுமை விகடன் 

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!


        நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

நன்றி  -மன்னை வை.ரகுநாதன் 

Wednesday, August 21, 2013

   ஏற்றம் தரும்  எலுமிச்சை...   வாரிக்கொடுக்கும்  வாழை!!  

          வேலையாட்கள் பிரச்னை, மின்சாரப் பிரச்னை, தண்ணீர் தட்டுப்பாடு... என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.
      குடை பிடித்து நின்ற எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து கிடந்த தோட்டத்தில்... பராமரிப்புப் பணியில் இருந்த சந்திரசேகரனை 'பசுமை விகடன்’ ஊடுபயிர்கள் சிறப்பிதழுக்காக ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம்.
       ''பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். அதுக்கு மேல படிக்கப் பிடிக்காததால, தேங்காய் மண்டியில வேலைக்குச் சேந்தேன். அதுவும் எனக்கு சரிப்பட்டு வரல. அதனால, அப்பா கூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அப்போ, கரும்பு சாகுபடி செஞ்சுட்டுருந்தோம். நாங்களே வெல்லமா காய்ச்சி வித்துடுவோம். ஆரம்பத்துல நல்ல லாபம் கிடைச்சுது. ஆனா, போகப்போக மகசூலும் குறைஞ்சுடுச்சு, வெல்லத்தோட விலையும் குறைஞ்சுடுச்சு. வேற சாகுபடிக்கு மாறலாம்னு யோசிட்டுருந்தப்போதான், ஒரு நண்பர் எலுமிச்சை போடறதுக்கு யோசனை சொன்னார். அவரும் எலுமிச்சை போட்டிருந்ததால அவரோட தோட்டத்துக்குப் போய் நேரடியா பார்த்து விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு... ரெண்டரை ஏக்கர்ல எலுமிச்சை சாகுபடியை ஆரம்பிச்சேன். இப்போ பன்னெண்டு வருஷமாச்சு. முதல் மகசூல் கிடைக்க ஆரம்பிச்சப்போ, கொஞ்சம் விற்பனைக்குக் கஷ்டமா இருந்துச்சு. இப்போ எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல வருமானம் கிடைச்சுட்டுருக்கு' என்று முன்னுரை கொடுத்த சந்திரசேகரன், தொடர்ந்தார். 



இரண்டு ஏக்கர் வெகுமதி 
கொடுத்த எலுமிச்சை!   
      'மூணு வருஷம் வரைக்கும் எலுமிச்சைக்கு இடையில ஊடுபயிரா, கனகாம்பரப் பூவையும், வாழையையும் போட்டிருந்தேன். ஆரம்பத்துல இது மூணுலயும் கிடைச்ச லாபத்தை வெச்சு, ஒரு வீட்டு மனை, ரெண்டு ஏக்கர் நிலம்னு வாங்கிப் போட்டிருக்கேன். இப்ப மொத்தம் கையில 13 ஏக்கர் நிலம் இருக்கு. ரெண்டரை ஏக்கர்ல தென்னை; 7 ஏக்கர்ல மா, எலுமிச்சை, வாழை இருக்கு. ஒரு ஏக்கரை நெல் சாகுபடிக்காக தயார் பண்ணி வெச்சுருக்கேன். மீதி ரெண்டரை ஏக்கர்ல 250 எலுமிச்சை மரங்களும் அதுல ஊடுபயிரா ஆயிரம் கற்பூரவல்லி வாழை மரங்களும் இருக்கு'' என்ற சந்திரசேகரன், எலுமிச்சை மற்றும் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அதை இங்கே பாடமாகவேத் தொகுத்திருக்கிறோம்.
வடிகால் வசதி அவசியம் !
     ''எலுமிச்சை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்வகைகளும் ஏற்றவை. ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலம், நடவுக்கேற்றப் பருவம். இந்தப் பருவத்தில் நடவு செய்யும் போது, நாற்றுகள் பழுதில்லாமல் நல்ல முறையில் வேர் பிடித்து வளரும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் எலுமிச்சை பதியன் செடிகளை வாங்கி நடவு செய்து கொள்ளலாம்.
20 அடி இடைவெளி !
        20 அடிக்கு 20 அடி இடைவெளியில், 2 கன அடி அளவுக்குக் குழிகள் எடுத்து ஒரு வாரம் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை, குழியின் மையத்தில் ஒரு அடி ஆழத்தில் இருப்பது போல, நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு செடிக்கு அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி, அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.
வாரம் ஒரு பாசனம் !
        நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் தண்ணீர் விட வேண்டும். அதற்குப் பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தால் போதுமானது.
         3 ஆண்டுகள் வரையில், எலுமிச்சைச் செடிகளுக்கு இடையில் கனகாம்பரம் போல ஏதாவது ஒரு பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். 4-ம் ஆண்டில் எலுமிச்சைக்கு இடையில் வாழையை நடவு செய்யலாம். வாழைக்கு ஆறரை அடி இடைவெளி விட வேண்டும். 7 ஆண்டுகளில் எலுமிச்சை மரங்கள் நன்கு வளர்ந்து பரவி விடும். அதனால், அதற்குப் பிறகு இடைவெளி உள்ள இடங்களில் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடிக்கு ஏலக்கி, பூவன், செவ்வாழை, கற்பூரவல்லி போன்ற ரகங்கள் ஏற்றவை. வாழையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அழித்துவிட்டு, புதிய கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா !
         எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, ஒரு அடி இடைவெளி விட்டு அரையடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து உரம் வைக்க வேண்டும். இப்படி வட்டப்பாத்தியில் உரம் வைப்பதால், மரங்களுக்கு உடனே சத்துக்கள் சென்று சேரும். அதாவது, ஒவ்வொரு வட்டப் பாத்தியிலும் ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம்... யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., ஜிப்சம் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்பகுதியில் இருந்து இரண்டு அடி இடைவெளிவிட்டு இதேபோல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரம் வைத்து வர வேண்டும்.
         வாழை மரங்களுக்கு 3-ம் மாதத்தில்... ஒரு மரத்துக்கு ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். 8-ம் மாதத்தில் ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம் பொட்டாஷ், டி.ஏ.பி., யூரியா, ஜிப்சம் ஆகிவற்றை ஒன்றாகக் கலந்து மரத்தில் இருந்து அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 80 லிட்டர் தண்ணீருக்கு... ஒரு லிட்டர் பஞ்சகவ்யா வீதம் கலந்து 'ராக்கர்’ தெளிப்பான் மூலம் தேவையான அளவுக்குத் தெளிக்க வேண்டும். கொசு மற்றும் வெள்ளை ஈ தாக்குதலை சமாளிக்கப் பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும்.
மரத்துக்கு 1,500 பழங்கள் !
        எலுமிச்சை மரம் மூன்றாம் ஆண்டில் பூவெடுத்து, காய்க்கத் தொடங்கும். அந்த ஆண்டில் சுமார் 100 முதல் 200 காய்கள் அளவுக்குக் காய்க்கும். 5-ம் ஆண்டில் இருந்து மரத்துக்கு 800 முதல் 1,500 காய்கள் வரை கிடைக்கும். ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டும்தான் காய்ப்பில்லாமல் இருக்கும். மற்ற நேரங்களில் தொடர்ச்சியாகக் காய்த்துக் கொண்டே இருக்கும். கற்பூரவல்லி வாழை, நடவு செய்த 8-ம் மாதத்தில் தார் விட ஆரம்பித்து... 11-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும். ஒவ்வொரு தாரிலும் 12 முதல்
15 சீப்புகளும், சீப்புக்கு 15 முதல் 30 காய்களும் இருக்கும்''
இரண்டரை ஏக்கருக்கு... ஆறு லட்சம் !
       சாகுபடிப் பாடத்தை முடித்த சந்திரசேகரன் நிறைவாக, ''ரெண்டரை ஏக்கர்ல மொத்தம் 250 எலுமிச்சை மரங்கள் இருக்கு. ஒரு மரத்துல இருந்து சராசரியா 1,000 பழங்கள் வீதம்
250 மரங்களுக்கும் சேத்து 2 லட்சத்து 50 ஆயிரம் பழங்கள் கிடைக்கும். ஒரு பழத்துக்கு சராசரி விலையா 1 ரூபாய் 50 காசுனு வெச்சுக்கிட்டாலே... 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ரெண்டரை ஏக்கர்லயும் சேத்து மொத்தம் 1,000 கற்பூரவல்லி வாழை மரங்கள் இருக்கு. ஒரு வாழைத்தார் 200 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகுது. ஒரு தார் சராசரியா 250 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே... 1,000 தாரை விக்கிறது மூலமா, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
       எல்லாம் சேர்த்து  ரெண்டரை ஏக்கர் நிலத்தில் இருந்து, 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, ரெண்டு லட்ச ரூபாய் செலவுனு வெச்சுக்கிட்டாலும், வருஷத்துக்கு 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லாபம்.
       இதுவரைக்கும் இயற்கை உரங்களையும் ரசாயன உரங்களையும் கலந்துதான் விவசாயம் செஞ்சுக்கிட்டிருந்தேன். ஆரம்பத்துல
       250 ரூபாய்க்கு வாங்கிட்டிருந்த யூரியா இப்போ 500 ரூபாய். 550 ரூபாயா இருந்த டி.ஏ.பி. இப்போ 1,100 ரூபாய் ஆகிப்போச்சு. அதனால, 'இவ்வளவு விலை கொடுத்து ரசாயன உரத்தை வாங்கிப் போட வேணாம்’னு முடிவு பண்ணி, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை முறைக்கு மாறிக்கிட்டுருக்கேன். அடுத்த வருஷம் முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவேன்'' என்றார், உற்சாகமாக!  




நாமே தயாரிக்கலாம் பதியன் நாற்று !
       எட்டு ஆண்டுகளுக்கு மேல் வயது உள்ள எலுமிச்சை மரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் இடையூறாக உள்ள கிளைகளில் பதியன் கட்டி செடிகளை உற்பத்தி செய்யலாம். இரண்டு மூன்றாகக் கிளைகள் வளர்ந்துள்ள, தண்டுப் பகுதியைத் தேர்வு செய்வது நல்லது. இந்தத் தண்டுப் பகுதி குறைந்தபட்சம் அரை அடி உயரம் இருக்க வேண்டும். இதில் ஓர் அங்குலத்துக்குத் தோல் பகுதியை மட்டும் லேசாக செதுக்கி எடுக்க வேண்டும். ஈரமான தேங்காய்நார்க் கழிவை, செதுக்கிய இடத்தில் வைத்து, பாலிதீன் பேப்பர் கொண்டு, காற்றுப்புகாத அளவுக்கு அழுத்தமாக நூலால் கட்ட வேண்டும்.
     30 நாட்களில் வேர்வளர்ந்து நிற்கும். வேருடன் சேர்ந்த கிளைப்பகுதியை வெட்டி, இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, நேரடியாகவோ அல்லது பையிலோ நடவு செய்து கன்றுகளாக வளர்த்தெடுக்கலாம்.

இயற்கை இருக்க... ரசாயனம் எதற்கு?

      சந்திரசேகரன் பயன்படுத்தும் ரசாயன உரங்களுக்கு மாற்றாக, இயற்கை முறை சாகுபடித் தொழில்நுட்பங்களைப் பற்றி இங்கு விளக்குகிறார், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்துக்கு அருகே இருக்கும் பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ். இவர் குடும்பத்தினர் 53 ஆண்டுகளாக எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
       ''100 கிலோ மண்புழு உரம் அல்லது 100 கிலோ எருவுடன் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மரத்துக்கு 5 கிலோ வீதம் வைக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசல் விட்டு வந்தால் போதும். வெள்ளை ஈ மற்றும் கொசுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த... பஞ்சகவ்யா மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றை 15 நாட்கள் இடைவெளியில் மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும். துருநோய் தாக்குதலுக்கு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம். இவற்றைக் கடைபிடித்து வந்தாலே... எலுமிச்சை மற்றும் வாழை சாகுபடியில், இயற்கை முறையில் நல்ல லாபம் பார்க்கலாம்'' என்றார், தேவராஜ். 

நன்றி ;பசுமை விகடன்  

தொடர்புக்கு;  சந்திரசேகர் ; 8489307569 
தேவராஜ் ;9865834536 

Saturday, August 17, 2013

வனங்கள் வாழட்டும்... காற்றும், மழையும் வரட்டும்!!

         உலக மக்கள் தொகை அதிகரித்து, பிற உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சமச்சீரற்ற நிலை நிலவுகிறது. ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என ஐ.நா., கூறுகிறது. 
       இந்தியாவில் வனப்பரப்பு 6 லட்சத்து 35 ஆயிரத்து 400 ச.கி.மீ. இது மொத்த நிலப்பரப்பில் 19.32 சதவீதம். 1951 முதல் 1980 வரை அணைகள் மற்றும் பாசனத்திற்காக 5 லட்சம் எக்டேர் வனம் அழிக்கப்பட்டது. ஆண்டுதோறும் 0.6 சதவீத காடுகள் அழிக்கப்படுகின்றன. ஜப்பான் போன்ற தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்த சிறிய நாடுகள் கூட, 60 சதவீத காடுகளை கட்டிக்காத்து வருகின்றன. இஸ்ரேலில் 1948 ல் 250 மி.மீ., இருந்த சராசரி மழையளவு, தற்போது 900 மி.மீ., அதிகரித்துள்ளது.பூமி சூட்டைத்தணித்து, வாயு மண்டலத்தை சுத்தப்படுத்துபவை மரங்களே. நாம் வெளியிடும் கரியமில வாயுவை உட்கொண்டு, நாம் சுவாசிக்க பிராண வாயுவை கொடுப்பவை மரங்களே. மரங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள். மரங்களை நட்டு வளர்த்த மன்னர்கள், வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ளனர். உலகில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. பூமியின் பாதுகாப்பு கவசமாக திகழும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால், சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலுக்கு நாம் ஆளாக, நீண்டகாலம் பிடிக்காது.
      மனிதன் இம்மண்ணில் வாழ எந்த அளவிற்கு உரிமை உள்ளதோ, அதே உரிமை தாவரம், பறவை, விலங்கினங்களுக்கும் உண்டு. மனிதனுக்காக மட்டும் இந்த உலகம் படைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும், உலகம் பொதுவானது. சுத்தமான பூமியை நம் சந்ததிக்கு விட்டுச் செல்ல முடியுமா? என சவால் எழுந்துள்ளது. 
        வனங்களை பாதுகாப்பது பற்றி வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:ராஜசேகரன், மதுரை வனவிரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர்: மன்னராட்சியில் மரங்களை வெட்டியோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் வனங்கள் அழிக்கப்பட்டு, தேக்குமரங்கள் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன. நம் வனங்களில் யூகாலிப்டஸ், தேயிலை நட்டனர். அனைத்து நதிகளும் உற்பத்தியாவது வனங்களில்தான். அதன் மதிப்பை நாம் உணரவில்லை.ஜப்பான் வனங்களை பாதுகாத்து, இந்தியா, தாய்லாந்திலிருந்து மரங்களை இறக்குமதி செய்கிறது. பசுமை போர்வையை அதிகரிக்க ஒரே வழி தனியார், புறம்போக்கு நிலங்கள், சாலையோரங்கள், கல்வி நிறுவனங்கள் என வாய்ப்புள்ள இடங்களில் மரம் வளர்ப்பதுதான்.
       டாக்டர் ராஜ்குமார், இயக்குனர், வனம் அறக்கட்டளை, தேனி: வனங்களில் மூங்கில் மரங்களின் உராய்வால், தீப்பற்றுவதாக கூறுவது தவறு. மனிதர்களால்தான் 100 சதவீதம் தீ விபத்து ஏற்படுகிறது. ஆடு, மாடு மேய்ச்சலுக்காக புல் மீது தீ வைக்கின்றனர். மழை பெய்ததும், சாம்பலிலிருந்து பசும்புற்கள் முளைக்கின்றன. வனத்தீயை அணைப்பது சாதாரண விஷயமல்ல.மக்கள் குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனவளத்தை கண்டறிய ஆராய்சி செய்ய வேண்டும். மதுரை உட்பட 5 மாவட்டங்களின் 90 லட்சம் பேருக்கு குடிநீராதாரம் வைகை. முன்பு ஆண்டுக்கு 10 மாதம் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருந்தது. நீராதாரமாக இருந்தது வனப்பகுதியே. தற்போது, ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே தண்ணீர் செல்கிறது. வனவளத்தை காப்பாற்றினால் மட்டுமே, வைகையை ஆற்றை காப்பாற்ற முடியும். வைகையை காக்க, மேகமலையை வன உயிரின கோட்டமாக அரசு அறிவித்துள்ளது. 
       சுப்பிரமணியராஜா, செயலாளர், வன உயிரின பாதுகாப்பு அமைப்பு, ராஜபாளையம்: காவல்துறை போல், வனத்துறைக்கு கூடுதல் அதிகாரம் தேவை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். வனங்களில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதை குறைக்க வேண்டும். மலையிலிருந்து வடியும் மழை நீரை உள்வாங்குவது தரைக்காடுகள். தரைக்காடுகள், மலை புல்வெளி மற்றும் சோலைக்காடுகளை பாதுகாத்தால்தான் தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பிக்க முடியும். அடுத்து குடிநீருக்கான போர் ஏற்பட வாய்ப்புள்ளது. வனப்பகுதி அருகே வனப்பாதுகாவலர் அலுவலகங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர். 
       காடு... அதை நாடு...-உலக காடுகள் தினம்-:காடுகளின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றில் இருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும் மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1971ம் ஆண்டு, இத்தினம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. உலகின் நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதற்கு முன் இது 50 சதவீதமாக இருந்தது. பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்பட போகும் ஆபத்துகள் கடுமையானதாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 
         நன்மைகள் பலவிதம் :காடுகள் என்பது வெறும் மரங்களை மட்டும் குறிப்பிடுவதல்ல. இது வாழ்க்கை கட்டமைப்பில் (உயிர்க்கோளம்) ஒன்று. மரங்களுக்கும், காடுகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. காடுகளின் உதவியால் தான், நாம் சுவாசிக்க முடிகிறது. இதைத் தவிர வீடுகளிலும், பொது இடங்களில் சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்து தப்பித்துக் கொள்ள மரங்களின் நிழலை தேடிச் செல்கிறோம். காடுகள் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பையும் தடுக்கின்றன. தட்ப வெட்ப நிலை, சீராக இருப்பதற்கு காடுகள் உதவுகின்றன. 
      நமது கடமை:இன்றைய சூழலில் மரங்களை பார்ப்பது அரிதாகி விட்டது. சாலை, ரயில் பணிகளுக்காக அரசு, ஏற்கனவே இருக்கும் மரங்களை வெட்டித் தள்ளுகிறது. இதைத்தவிர வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதின் மூலம் பல மரங்கள் எரிந்து விடுகின்றன. மக்களும் வருமானம் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு விளை நிலங்களை, குடியிருப்பு பகுதிகளாக மாற்றி வருகின்றனர். இதனால் வெப்பநிலை, பருவநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. 
       ஒன்றுக்கு பத்து:உலக வனத்துறையின் சட்டப்படி, ஒரு மரத்தை வெட்டும் போது, அதற்கு பதிலாக 10 மரங்கள் நடப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது. அப்படியிருந்தும் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சதவீதம் மட்டுமே புதிதாக மரங்கள் நடப்பட்டுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
         என்ன செய்வது:பல வழிகளிலும் மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும் பயன்படும் காடுகளை, அதன் அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். புதிதாக காடுகள் வளர்ப்பதற்கும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இதற்கு ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு மரம் வளர்ப்பது அவசியம். இவ்வாறு அனைவரது வீடுகளில் மரம் வளர்ப்பதுடன், ஏற்கனவே இருக்கும் மரங்களை பராமரித்தால், பூமிக்கு தேவையான அளவில் காடுகள் நிலைப்பெறும். இதற்கு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்திய பொருளாதாரம், விவசாயத்தை பெருமளவில் சார்ந்துள்ளது. எனவே காடுகளை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம். 


மரம் நடுதல்




             மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைக்கவும் , அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தியும் வருவோம்.

              தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.

முதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள் பின்னர் அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றை கருக செய்வதற்கு இவர்கள் எதற்கு நடனும்.

             இதில் ஒரு சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.பொதுவாக அரசாங்கம் செடிகளை வைத்தாலும், அதை ஒரு சில இடங்களிலேயே சரியாக பராமரிக்கிறார்கள், பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (அந்த கூண்டு மட்டும் காணலாம்).

            சரி நமது அரசாங்கங்கள் தான் அப்படி செய்ய பழகி விட்டது, இதில் கவலை பட என்ன இருக்கிறது! என்று நம்மை சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதை போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை தவிர்க்கவேண்டும்.

             வருடாவருடம் பலர் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள். அதே போல் செடி நட்டாலும் பாதுகாப்பு இன்றி செடி பட்டுபோய் விடுகிறது. அதற்க்கு பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து!! பின் தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போய் விடுகிறது,. இதை போல மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக வெட்டி வேலை செய்வதை தவிர்த்து,வைத்த செடியை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டுகிறோம் .

           மரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல் அதில் எந்த சந்தேகமுமில்லை, தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.

           ஆனால், இதை போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நடவேண்டும்? செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா! எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி! . ஆசை இருந்தால் மட்டும் போதுமா! அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா! இவர்களை போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டாகும் .

       இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை. இவர்கள் செய்யும் இந்த செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மனதிற்கு ஆறுதலும் சந்தோஷமும் அளிக்கும் செய்தி.
            இயற்கையின் மகத்துவத்தை உணராதவரை நமது பகுதி முன்னேற வாய்ப்பில்லை. இதன் அருமை உணராமல் எப்படி தான் வறட்டு மனம் கொண்டவர்களாக சி(ப)லர் இருக்கிறார்களோ! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!! அகிலம் தழைக்க !!!



'தாய்' ஸ்டைல்: தேங்காய் சாதம்


       'தாய்' ஸ்டைல் உணவுகள் மிகவும் சுவையானது மற்றும் எளிமையானது. மேலும் இந்த உணவுகளில் பல மூலிகைகள் பயன்படுத்துவதால், அந்த உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அந்த வகையில் தாய் ஸ்டைல் தேங்காய் சாதமும் மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இதனை மதிய வேளையில் செய்து, குழம்புடன் சாப்பிட்டால் சிறந்த சுவை கிடைக்கும். இப்போது அந்த தாய் டைல் தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


 தேவையான பொருட்கள்:


 பாசுமதி அரிசி - 1 1/2
 கப் தேங்காய் பால் - 1 கப் 
துருவிய தேங்காய் - 1/2 கப்
 சர்க்கரை - 1 டீஸ்பூன்
 எலுமிச்சை இலை - 2
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
 தண்ணீர் - 1 1/2 கப்

 செய்முறை:



        முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் பால், தண்ணீர், எலுமிச்சை இலை மற்றும் உப்பு சேர்த்து கலந்து, பின் அடுப்பில் வைத்து, தீயை குறைவாக வைத்து நன்கு 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் அரிசியைப் போட்டு கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் தீயை குறைவிலேயே வைத்து, அரிசியை வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் ஆனப் பின்னர், மூடியைத் திறந்து, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பின் அதில் உள்ள எலுமிச்சை இலையை எடுத்துவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும். இறுதியில் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சூப்பரான தாய் ஸ்டைல் தேங்காய் சாதம் ரெடி!!! இதனை மதிய வேளையில் விருப்பமான குழம்பு ஊற்றி சாப்பிட்டால், அருமையாக இருக்கும். 




Tuesday, August 13, 2013

மரம் வளர்ப்போம் .. நல்லறம் செய்வோம் ....



மழைகளின் வீழ்ச்சி
,,,நீர்
பூமியின் எழுச்சி
,,,மரம்

நம் கல்யாண
வைபோகத்தில்
பந்தல் அலங்கரிக்க,
,,,வாழை மரம்
வாசலில் தோரணமாம்
,,,மாவிலைகள்
வந்தோரை உபசரிக்க
,,,வெற்றிலை, பாக்கு
விருந்தோம்பளுக்கு,
,,,வாழை இல்லை
வயிறார உண்பதற்கு
,,,காய்,கனிகள்
அத்துனையும்
வேகவைக்க
மரங்களின் ஒத்துழைப்பு
விறகாய் !

மனிதன்
மறத்தால் கதவு செய்து
மரத்தாழ் இட்டு
தன்னை
தற்காத்துக்கொண்டான்

நான் என்ன
பணம் காய்க்கும்
மரமா ?
எனக்கேட்போர்க்கு
ஒன்று சொல்வேன்
பணத்தின் மூலக்கூறே
மரம்தான்!

மரம்
இருந்தாலும்
ஆயிரம் பொன்
இறந்தாலும்
ஆயிரம் பொன்

இறந்த மரம்
பூமிக்குள் புதையுண்டால்
மீண்டு வரும்
உந்து சக்தி
நிலக்கரியாய்

விலை மதிப்பில்லா
வைரங்களின்
முதாதையர்
மரங்கள்தாம்

மதி கெட்டோரை
மர மண்டை
என்று கூறாதீர்
மரங்கள்
கோபித்துக்கொள்ளும்

புத்தருக்கு,
,,,போதிமரம்
பிள்ளை இல்லார்க்கு
அரசமரம் [ அவர்களின் ஐதீகம் ]

மனிதனால்
வெட்டி வீழ்த்தப்பட்ட
மூங்கில்[ மரம் ]
எழுந்து நிற்கிறது
ஏணியாய் !

பிள்ளைய பெத்தா
கண்ணீரு..
தென்னையை பெற்றா
இளநீரு.

ஆளும்,வேலும்
பல்லுக்குறுதி.

நெருப்பில் போட்டால்
விறகு
நீரில் போட்டால்
கட்டுமரம்
வளரவிட்டால்
நிழல் குடை
அத்துனையும்
மனித பயன்பாடுதான்..

வீழ்ச்சி கண்ட மனிதருக்கு
எழுந்து நின்ற மரம் சொல்லும்
ஆறுதலாய்
நானும் வீழ்ந்த விதைதான்
என்று..

இருக்க இடம் தேடி
அழித்திட்டீர்
காடுகளை
அமைத்திட்டீர்
வீடுகளை..

சரி
எதிர்கால
நம் சந்ததியினர்
உயிர் வாழ
உயிர் காற்றிர்க்கு
தினரத்தான் போகின்றீர்கள்

ஆகையால்
மரம் வளர்ப்போம்
நல்லறம் செய்வோம்

நன்றி ;மு.செ.மு.சபீர் அஹமது .


மரம் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை

 கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை   

மரம் ...கவிதைத்துளிகள் ...



  • வணக்கம்...
  • மரங்களைப் பாடுவேன்.
  • வாரும்  வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை  என்ன சொன்னீர்?
  • மரம் என்றீர்
  • மரம் என்றால் அவ்வளவு மட்டமா?
  • வணக்கம்,அவ்வையே நீட்டோலை  வாசியான் யார் என்றீர்?
  • மரம் என்றீர்!
  • மரம் என்றால் அத்தனை இழிவா?
  • பக்கத்தில் யாரது பாரதி தானே?
  • பாஞ்சாலி மீர்க்காத பாமரரை என்ன வென்றீர்?
  • நெட்டை மரங்கள் என்றீர்!
  • மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா?
  • மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
  • பூமியின் ஆச்சிரியகுறி,
  • நினைக்க நினைக்க நெஞ்சூரும் அனுபவம்,
  • விண்மீனுக்கு தூண்டில் போடும் கிளைகள்,
  • சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்,
  • உயிர் ஒழுகும் மலர்கள்,
  • மனிதன் தரா ஞானம் மரம் தரும் எனக்கு!
  • மனிதன் தோன்றும் முன் மரம் தொன்றிற்று!
  • மரம் நமக்கு அண்ணன், அண்ணனை பழிக்காதீர்கள்!
  • மனித ஆயுள் குமிழிக்குள் கட்டிய கூடாரம்,
  • மரம் அப்படியா?
  • வளரும் உயிர்களில் ஆயுள் அதிகம் கொண்டது அதுவேதான்!
  • மனித வளர்ச்சிக்கு முப்பது வந்தால் முற்றுப் புள்ளி.
  • மரம் இருக்கும் வரை பூ பூக்கும் இறக்கும் வரை காய் காய்க்கும்.
  • வெட்டி நட்டால் கிளை மரமாகுமே,
  • வெட்டி நட்டால் கரம் உடம்பாகுமா?
  • மரத்தை அறுத்தால் ஆண்டு வளையம் வயது சொல்லும்.
  • மனிதனை அறுத்தால் உயிரின் செலவைத்தான் உறுப்பு சொல்லும்.மரத்திற்கும் வழுக்கை விழும் மறுபடி முளைக்கும்.
  • நமக்கோ உயிர் பிரிந்தாலும்  மயிர் உதிர்ந்தாலும்.
  • ஒன்றென்று அறிக!மரங்கள் இல்லையேல் காற்றை எங்கே போய் சலவை செய்வது?
  • மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய் மனுச் செய்வது?
  • மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே தப்பா ஏறி?
  • பறவைக்கும் விலங்குக்கும் மரம் தரும் உத்திரவாதம் மனிதர் நாம் தருவோமா?
  • மனிதனின் முதல் நண்பன் மரம்!
  • மரத்தின் முதல் எதிரி மனிதன்!
  • ஆயுதங்களை மனிதன் அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான்!
  • உண்ண கனி,
  • ஒதுங்க நிழல், 
  • உடலுக்கு மருந்து,
  • உணர்வுக்கு விருந்து, 
  • அடைய குடில், 
  • அடைக்க கதவு, 
  • அழகு வேலி, 
  • ஆட தூலி, 
  • தடவ தைலம், 
  • தாளிக்க எண்ணை, 
  • எழுத காகிதம், 
  • எரிக்க விறகு, 
  • மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!! 
  • மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!!
  • பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம், 
  • நடந்தோம் நடைவண்டி மரத்தின் உபயம், 
  • எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்,
  • மணந்தோம் மாலை சந்தனம் மரத்தின் உபயம், 
  • கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம், 
  • துயின்றோம் தலையணை பஞ்சு மரத்தின் உபயம், 
  • நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம், 
  • இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம், 
  • எறிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம், 
  • மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான், 
  • மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான், 
  • மனிதா மனிதனாக வேண்டுமா மரத்திடம் வா ஒவ்வொரு மரமும் போதி மரம்!!