Tuesday, October 15, 2013



மரங்களை வளர்ப்போம் ...


     நம்நாட்டில் மொத்த நிலப்பரப்பு 32.87 லட்சம் சதுர கிலோ மீட்டர். இதில் 7.75 லட்சம் சதுர கிலோ மீட்டரில் வனப் பகுதிகள் உள்ளன. இது மொத்த நிலப்பரப்பில் 23.75 சதவீதமாகும். நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33.33 சதவீதப் பரப்பளவை வனப் பரப்பாக ஏற்படுத்த வேண்டும் என்பது தேசிய வனக் கொள்கையாகும். 


   தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1.30 லட்சம் சதுர கிலோ மீட்டர். அதில் 22,877 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு வன நிலமாகும். இது தமிழகத்தின் நிலப்பரப்பில் 17.59 சதவீதமாகும். 

   இன்னும் 11.4 கோடி மரங்கள் வளர்க்கப்பட்டால்தான் வனப்பரப்பளவு 33 சதவீதத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. உலக வெப்பமயமாதலைத் தவிர்க்க மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்ற பிரசாரமும் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. 
 
   மத்திய, மாநில அரசுகள் மரம் வளர்ப்பதற்காக "சமூகக் காடு வளர்ப்புத் திட்டம்' போன்ற திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. 

  அரசு, அமைச்சர்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் அவ்வப்போது மரக் கன்றுகள் நடும் விழாக்கள் நடைபெறுகின்றன. 

  ஆனால், இவையெல்லாம் மரம் வளர்ப்பதில் பெரிய வெற்றியைக் கொடுத்தனவா? என்று கேட்டால், இல்லை என்பதே நிதர்சனம். 

  மரம் வளர்ப்பதில் பொதுமக்களின் நேரிடையான பங்கு இல்லாததே இதற்குக் காரணம். 

    நகரப் பகுதிகளில் மரம் வளர்க்க இடம் இல்லை. கிராமப்பகுதியில் மட்டுமே மரம் வளர்க்க முடியும். சாதாரண விவசாயிகள் பெரும்பாலும் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை மட்டும் பயிர் செய்கின்றனர். அப்படிப் பயிர் செய்யும் வயல் வரப்பில் தங்களுடைய வீட்டுத் தேவைக்காக ஒரு சில தென்னை, மா மரங்களை வளர்க்கின்றனர். 

    அதிக அளவில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் ஏக்கர் கணக்கில் தென்னை, மா போன்ற மரங்களை வளர்க்கின்றனர். சாதாரண மக்களை மரம் வளர்க்கும் திட்டத்தில் இணைப்பது எப்படி என்று அரசு, சமூக சிந்தனையாளர்கள், உளவியலாளர்கள் இதுவரை சிந்திக்காதது ஏன் என்பதும் கேள்விக்குரியது. 

  ஒவ்வொரு கிராமத்திலும் அரசுக்குச் சொந்தமான இடங்கள் நிறைய உள்ளன. அந்த இடங்களில் கிராம மக்களைக் கொண்டே மரங்கள் வளர்க்கலாம். 

  அரசுக்குச் சொந்தமான இடத்தை ஒரு கிராமத்துக்கு என்று பொதுவாக ஒதுக்கி, அதில் ஒவ்வொரு குடும்பமும் தலா 10 அல்லது 20 மரங்களை வளர்த்துக் கொள்ளலாம் என உத்தரவிடலாம். 

  20 ஆண்டுகள் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் விளைபொருள்களை மரத்தை வளர்ப்பவர்கள் அனுபவிக்கலாம். ஆனால், வளர்ந்த மரங்களை வெட்டக் கூடாது என்று அறிவிக்கலாம். 

    உதாரணத்துக்கு, தென்னை மரம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விளைச்சல் கொடுக்கும் என்று வைத்துக் கொண்டால், அடுத்த 15 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் மகசூல் விவசாயிக்கே சொந்தமாகும். 

     நிலமற்ற ஏழை விவசாயிகள், குறு, சிறு விவசாயிகள் 15 ஆண்டுகளுக்கு 20 தென்னை மரங்களிலிருந்து வருமானம் கிடைக்கும் என்றால் ஏன் மரம் வளர்க்க வர மாட்டார்கள்? 

 நேரிடையான பலன் கிடைக்கும் என்றால் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். 

   இதைப் போலவே கல்லூரி மாணவ, மாணவிகளை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தலாம். ஒவ்வொரு கல்லூரிக்கும் சில ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அங்கு மரங்களை மட்டும் வளர்க்க வேண்டும். அதுவும் மாணவ, மாணவிகள் நேரிடையாகச் சென்று வளர்க்க வேண்டும். 

    உதாரணத்துக்கு, ஒரு கல்லூரியில் 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் அந்தக் கல்லூரிக்கு 500 மரங்கள் வளர்க்க இடம் ஒதுக்க வேண்டும். வாரம் முழுவதும் சுழற்சி அடிப்படையில் மாணவர்கள் நேரிடையாகச் சென்று மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். 

  பள்ளி, கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் முதல் நாளே ஒரு மரக்கன்றை நட்டு வைக்க வலியுறுத்தலாம். அந்த மரத்துக்கு அந்த மாணவரின் பெயரையே சூட்டலாம். இதன் மூலம், அந்தக் மரக்கன்றைப் பராமரிப்பதில் மாணவர்களிடையே ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிக் காலங்கள் முடியும் வரை அந்த மரத்தைப் பராமரிக்க அறிவுறுத்தலாம். 

     இப்படிச் செய்வதால் மரம் வளர்ப்பதோடு, இளைய தலைமுறையினரிடம் மரம் வளர்ப்பது குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியும். 

  தொழிற்சாலைகள் பெருகி வரும் சூழ்நிலையில், ஒவ்வொரு தொழிற்சாலையும் ஒரு குறிப்பிட்ட ஏக்கரில் மரம் வளர்க்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரலாம். 

      எல்லாம் கேட்பதற்கு நல்லா இருக்கு... ஆனால் நடைமுறையில் நிறைய பிரச்னைகள் வருமே என்ற கேள்வி எழலாம். 

  மரம் வளர்க்கிறேன் என்று இடத்தை வாங்கிக் கொண்டு சிறிது காலம் கடமைக்குச் சில மரங்களை வளர்த்துவிட்டு பிறகு, அந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தினால் என்ன செய்வது? 

       மரம் நன்றாக வளர்ந்து 20 ஆண்டுகள் பலன் தந்த பின்னர் அந்த மரங்களில் இருந்து வரும் விளைச்சல் யாருக்குச் சொந்தம்? 
 இப்படி நடைமுறைச் சிக்கல்கள், கேள்விகள் நிறைய எழலாம். 
 
 முறையாகச் சிந்தித்து, தெளிவாக முடிவெடுத்தால் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

நன்றி ;தினமணி 



No comments:

Post a Comment