‘இவங்கள எங்கயாச்சும் ஹோம்ல சேர்த்திருங்க’ன்னு சொல்றப்ப மனசு லேசா வலிக்கும். என்னடா உலகம்னு எனக்கு நானே நொந்துக்கிட்டு, அவங்கள பத்திரமா கொண்டுபோய் ஹோம்ல சேர்த்துட்டு வருவேன். யாராச்சும் கவனிப்பாரில்லாம இருக்கிறதா பேப்பர்கள்ல செய்தி பாத்தாக்கூட உடனே ஓடிருவேன்.

 “நான் உயர்கல்வி படிக்கல. இலக்கியம் படிச்சதில்ல. கோயிலுக்கு போனதில்ல. தியானம் செய்ததில்ல. ஆன்மிகம் தெரியாது. அரசியல்ல இறங்கல. ஜாதி மதம் பார்க்கிறதில்ல. யாரையும் எதிரியா நினைச்சதில்ல. சொத்து ஏதும் சேர்க்கல. நண்பர்கள் பெருகுவதை தவிர்ப்பதில்ல…” அட்டகாசமாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் சொக்கலிங்கம்!

   படித்தது நாலாம் வகுப்புதான். ஈரோடு மாவட்டம் சென்னிமலைையச் சேர்ந்த இவரை ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம் என பக்கத்து மாவட்ட மக்களுக்கும் நன்கு தெரிந்திருக்கிறது. “சாலையில் முதியவர் யாராவது பசியால் சுருண்டு கிடக்கிறார்களா.. மனநலம் பாதித்த யாராவது சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்களா.. யாரையாவது அருவருப்பு என்று சொல்லி சொந்தபந்தங்களே ஒதுக்கி வைத்திருக்கிறார்களா.. உடனே, சொக்கலிங்கத்துக்கு போன் போடு” என்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஆபத்பாந்தவனாய் இருக்கிறார் சொக்கலிங்கம்.

  '’கஷ்டப்படறவங்க பத்தி இப்படி போன் கால் வந்தா மனசு பதறுது சார்... உடனே, நெசவு வேலைய அப்படியே விட்டுட்டு, சம்பந்தப்பட்ட இடத்துக்கு கிளம்பிடுவேன். நல்ல காரியத்துக்குத்தானே போறான்னு முதலாளியும் ஏதும் சொல்றதில்ல. கையில காசிருந்தா யோசிக்க மாட்டேன். இல்லாட்டி கைத்தறி கூட்டுறவு சங்க மேனேஜருங்க யாருக்காச்சும் போன் போட்டு பணம் கேப்பேன். அவங்களும் ஆள் போட்டு பணத்தை குடுத்துவிடுவாங்க. அவங்க மட்டுமல்ல.. நான் கேட்டா யாருமே இல்லைனு சொல்றதில்ல. பாதிக்கப்பட்டவங்க எங்க இருக்காங்களோ அங்கேயே போயி, அவங்களை சுத்தப்படுத்தி, பேருந்துலயோ, இல்ல வேறு ஏதாவது வாகனத்திலயோ ஏத்தி அவங்களுக்காக இருக்கிற ஹோமுக்கு கொண்டுபோய் விட்டுட்டு வருவேன்.
கேன்சர், எய்ட்ஸ் நோயாளிகளை உறவுகளே ஒதுக்கி வைச்சிடுறாங்க. அவங்களே எனக்கு போன் போட்டு, ‘இவங்கள எங்கயாச்சும் ஹோம்ல சேர்த்திருங்க’ன்னு சொல்றப்ப மனசு லேசா வலிக்கும். என்னடா உலகம்னு எனக்கு நானே நொந்துக்கிட்டு, அவங்கள பத்திரமா கொண்டுபோய் ஹோம்ல சேர்த்துட்டு வருவேன். யாராச்சும் கவனிப்பாரில்லாம இருக்கிறதா பேப்பர்கள்ல செய்தி பாத்தாக்கூட உடனே ஓடிருவேன். தினமும் யாருக்காச்சும் உதவி செஞ்சாத்தான் ராத்திரி தூக்கம் வருது.

  இன்னைக்கி நேத்து இல்ல..சின்ன வயசுலருந்தே நான் இப்படித்தான். ஒருசமயம், எங்கூட படிச்ச பையன், வீட்டுல அரிசி இல்லேன்னு, சாப்பாடு கொண்டு வரல. என் சாப்பாட்டை அவனுக்கு கொடுத்துட்டு, எங்க ஆத்தாக்கிட்ட அழுது அடம்பிடிச்சு ரெண்டு படி அரிசி வாங்கி அவனுக்குக் கொடுத்தேன்’’ வெள்ளையாய் சிரிக்கிறார் சொக்கலிங்கம்.

      சோறுபோடும் தொழிலை பகுதிநேரமாகவும் நேசக்கரம் நீட்டும் சேவையை 'சென்னிமலை சமூக சேவை இல்லம்' என்ற பெயரில் முழுநேரமும் செய்கிறார். தனது சேவைக்கு குடும்பம் குறுக்கே நிற்கக் கூடாது என்பதற்காக திருமணமே வேண்டாம் என்று இருந்தாராம். ஆனால், அது நடக்கவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அக்காவின் கடைசி ஆசையை நிறைவேற்ற, அவரது மகளை திருமணம் செய்திருக்கிறார்.

     தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்தி, சென்னிமலையிலிருந்து டெல்லி வரை 2004-ல் சைக்கிள் பயணம் போயிருக்கிறார் சொக்கலிங்கம். அதுகுறித்தும் அக்கறையோடு பேசியவர், “நதிகளை இணைச்சாத்தான் விவசாயி பொழைக்கலாம். அவன் பொழைச்சாத்தான் நாடு செழிக்கும். நான் சைக்கிள் பயணம் போறேன்னதும் எஸ்.கே.எம். மொதலாளி மயிலானந்தம் சார் எனக்கு புதுசா ஒரு சைக்கிளே வாங்கி கொடுத்தார். அப்ப எஸ்.பி.யா இருந்த பாலசுப்பிரமணியன் பாராட்டுக் கடிதம் கொடுத்தாரு. அதை வைச்சே நாடு முழுக்க அத்தனை போலீஸ் ஸ்டேஷன்லயும் தங்கிக்கிட் டேன். 2850 கி.மீ. சைக்கிள் பயணத்தை முடிச்சுட்டு, அப்ப குடியரசுத் தலைவரா இருந்த அப்துல் கலாமையும் சந்திச்சு பேசிட்டு வந்தேன்” என்று நெகிழ்கிறார்.

      தொழிலை விட்டுவிட்டு சேவைக் காக அலைந்ததால் சில வருடங் களுக்கு முன்பு, வீட்டை அடமானம் வைத்து அதை மீட்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் சொக்கலிங்கம். கடைசியில், இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் பண உதவி செய்து வீட்டை மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு, சொக்கலிங்கத்தின் பெயரில் இருந்த வீட்டை அவரது மனைவி பெயருக்கு மாற்றிவிட்டார்களாம் உறவுக்காரர்கள்!

  “ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் சேவையை தொடரலாமே’’ என்று கேட்டால், “அதுக்குத்தான் ஆயிரம் பேர் இருக்காங்களே. அப்படி எல்லாம் போனா பணம் அது இதுன்னு வர ஆரம்பிக்கும். நோக்கம் பாழாகிப் போகும். நான் இப்படியே இருந்துட்டுப் போயிடுறேன். அதுதான் நிம்மதி’’ என்கிறார்.


நன்றி ;தி இந்து