Saturday, October 5, 2013


இயற்கை உணவுமுறைகள் ; பசுமை 

அங்காடியில் விளக்கம்...



 ஈரோடு, எஸ்.கே.சி., ரோட்டில் எம்.எல்.ஏ., அலுவலகம் எதிரே உள்ள பசுமை அங்காடி சார்பில், இயற்கை உணவு முறைகள் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பசுமை அங்காடியில், ரசாயன உரம் இன்றி, இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு பொருட்கள் குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்கின்றனர். பசுமை அங்காடி சார்பில் நேற்று, இயற்கை உணவு முறைகள் பற்றிய செயல் விளக்கமும், இயற்கை உணவு குறித்த பொதுமக்களின் சந்தேகத்துக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. புதுச்சேரி "எனர்ஜி ஹோம்' டாக்டர் மாணிக்கம் பங்கேற்று, இயற்கை உணவு குறித்து விளக்கம் அளித்தார். நவமூலிகை ஜூஸ் வகைகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும், மூலிகை இட்லி, பீட்ரூட், மாங்காய், இஞ்சி, வாழைப்பூ, கேரட், ஸ்வீட், கறிவேப்பிலை, புதினா, வெஜிடெபிள் உள்பட, 60 வகையான இட்லி வகைகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது: காலை உணவாக, பழம், மூலிகை, இளநீர், பழக்கலவை, பசும்காய்களின் சாறினை பருக வேண்டும். வரகு அரிசி, கைக்குத்தல் அரிசி, கம்பங்கூழ், கொள்ளு அவல் ஆகிய கஞ்சி வகையும், சாமை, ராகி கூழும் சாப்பிடுவது, உடலுக்கு ஆரோக்கியம் தரும். மதிய நேரத்தில், அவல் உணவுடன், பசுங்காய்கள் கலவை, கீரை துவையல் பொடி, தேங்காய் துருவல் கலந்து சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில், கோதுமை, கம்பு, ராகி உப்புமா வகையும், ராகி சோளம், வரகு அவல் உப்புமா, ராகி தோசை, மக்காச்சோளம் ரவை உப்புமாவை சாப்பிடுவது நல்லது. இரவு நேரத்தில் படுக்கும் முன், பழச்சாறுடன் தேன் அல்லது, சுத்தமான நீரில் தேன் கலந்து பருக வேண்டும்.
இரவு உணவு சாப்பிட்டு, மூன்று மணி நேரத்துக்கு பின் உறங்க வேண்டும். முளையிட்ட பயிறு வகைகள், கொட்டை பருப்புகள், உலர்ந்த பழங்கள், இயற்கை விவசாயத்தில் தயாரித்த இயற்கை வெல்லம், கொல்லிமலைத்தேன் வகையை உணவில் கலந்து, மூன்று மாதம் பயன்படுத்தினால், உடலில் உள்ள அனைத்து நோயும் நம்மை விட்டு நீங்கும், என்றார். ஏற்பாடுகளை பசுமை அங்காடி நிர்வாகி ஜெகதீசன் செய்திருந்தார். விளக்க முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும், இயற்கை உணவுகள் வழங்கப்பட்டது.


நன்றி ;தினமலர் 

No comments:

Post a Comment